திருப்பூரில் ரூ.80 லட்சத்துக்கு யானைத் தந்தங்களை விற்க முயன்ற மூவர் கைது

திருப்பூரில் ரூ.80 லட்சத்துக்கு யானைத் தந்தங்களை விற்க முயன்ற மூவர் கைது
Updated on
1 min read

திருப்பூரில் யானைத் தந்தங்களை பதுக்கி விற்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அவிநாசியப்பன் (40). இவர், திருப்பூரில் ரயில்வே சுமைப்பணி தொழிலாளியாக உள்ளார். அவ்வப்போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும் பணியாற்றி வந்தார்.

இவரது நண்பர்கள், திருப்பூர்வெள்ளியங்காட்டை சேர்ந்த முருகன்(45), வீரப்பன் (65). கடந்த சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஒருவர், 3 பேருக்கும் அறிமுகமாகியுள்ளார். தன்னிடம் உள்ள யானைத் தந்தங்களை விற்றுத் தந்தால் பங்குத்தொகை தருவதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, யானைத் தந்தங்களை பார்சல் செய்து, கம்பத்திலிருந்து பேருந்து மூலமாக அந்நபர்அனுப்பி வைத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட 3 பேரும், வெள்ளியங்காடு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனைக்கு ஆள் தேடியுள்ளனர்.

இதுதொடர்பாக, திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அவிநாசியப்பனின் செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட வன அலுவலர் ஒருவர், யானைத் தந்தங்களை வாங்குவதுபோல பேசியுள்ளார். அப்போது, ஒரு யானையின் இரு தந்தங்கள் 4 துண்டுகளாக தங்களிடம் இருப்பதாக அவிநாசியப்பன் தெரிவித்துள்ளார். பலகட்ட பேரத்துக்குப்பின் தந்தங்களுக்கு ரூ.80 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவிநாசியப்பன் உள்ளிட்ட மூவரையும் நேரில் சந்தித்த வனத்துறையினர், யானையின் தந்தங்களைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். வெள்ளியங்காட்டில் தந்தங்களை பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு அவிநாசியப்பன் உள்ளிட்டோர் அழைத்து சென்றுள்ளனர். உடனடியாக தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களை 3 பேருக்கும் வழங்கிய மர்மநபர் குறித்தும், யானையை வேட்டையாடி தந்தங்கள் எடுக்கப்பட்டதா அல்லது இறந்த யானையின் தந்தங்களா என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in