

சென்னை: சென்னை, கொண்டித்தோப்பு, ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் ரத்னாதேவி (59). இவர் கடந்த 17-ம் தேதி மதியம் ஏழுகிணறு, படவட்டம்மன் கோயில், பெத்து நாயக்கன்தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையன் ஒருவர் ரத்னாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
அதிர்ச்சி அடைந்த ரத்னாதேவி, இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையில் ரத்னாதேவியின் தங்கச்சங்கிலியை பறித்து தப்பியது சென்னை, மண்ணடி மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது பைசல் மீது, கொரட்டூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 1 சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து போலீஸார் கூறியது: முகமது பைசல் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பான பிடெக் படித்து முடித்தவர். படிக்கும் பருவத்தின் போதே, துபாயில் உள்ள நண்பர் மூலம், ஐ போன் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
நண்பரின் ஆசையால், அதிக அளவில் ஐ போன்களை வாங்கி, பலரிடம் விற்று வந்த நிலையில், நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமையால் தவித்து வந்துள்ளார். கடன் நெருக்கடியை, தாங்க முடியாத கடனை அடைக்க, வழிபறியில் ஈடுபட்டால் மட்டுமே, கடனை அடைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளார். அதன்படி, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், 2020-ம் ஆண்டு, அகில இந்திய அளவில் நடந்த இளையோருக்கான ஆணழகன் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்றனர்.