

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலமாக பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், பேசியும் அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முதலில் கைதானகிருத்திகா ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரோனா நிவாரண நிதி எனக்கூறி பலரிடம் ரூ. 2.89 கோடி பணம்வசூலித்து அதன்மூலம் சொகுசுகார்கள், நகைகள் வாங்கி மோசடிசெய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பப்ஜி மதன் மற்றும் கிருத்திகாவின் தனியார் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் சட்ட விதிகளின்படி வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி வங்கி கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று நடந்தது. அப்போது வங்கிக் கணக்கை குறுகிய காலத்துக்குத் தான் முடக்கி வைக்க முடியும் என்றும், நீண்ட காலத்துக்கு கணக்கைமுடக்கி வைப்பது தனது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது என்றும் கிருத்திகா தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில், சட்டப்படி வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1 கோடியே ஒரு லட்சம்யாருக்கு சொந்தம் என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என கோரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன்கூட்டியே நோட்டீஸ் பிறப்பித்தால் அது ஆதாரங்களை அழிக்க வழிவகுத்து விடும் என்பதால், முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க அவசியமல்லை. அதேசமயம், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கக்கோரி மனுதாரர் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுகலாம், எனக்கூறி மனுவைதள்ளுபடி செய்து உத்தரவிட் டுள்ளார்.