அடமானம் வைக்கப்படும் நகைகளில் ‘கண்ணிகள்’ திருட்டு: கேத்தனூர் வங்கிக் கிளை நகை மதிப்பீட்டாளர் கைது

அடமானம் வைக்கப்படும் நகைகளில் ‘கண்ணிகள்’ திருட்டு: கேத்தனூர் வங்கிக் கிளை நகை மதிப்பீட்டாளர் கைது
Updated on
1 min read

விவசாயி வைத்த அடமான நகையின் எடை குறைந்ததாக எழுந்த புகாரில், நகையின் கண்ணிகளை (இணைப்புகள்) நூதனமாக திருடிய கேத்தனூர் வங்கிக் கிளையின் நகை மதிப்பீட்டாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கேத்தனூரில், பாரத ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. கடந்த மே மாதம் விவசாயி கோவிந்தராஜ் (52)வீட்டில் இருந்த தங்க நகையை அடமானம் வைத்து ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பணத்தை செலுத்தி நகையை திருப்பி உள்ளார். அப்போது நகையைப் பரிசோதித்த போது, நகையின் கண்ணிகள் (இணைப்புகள்) குறைவாக இருந்ததால், எடை குறைந்ததைக் கண்டறிந்தார். இது தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு, காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார். கேத்தனூர் வங்கிக் கிளையில் தங்களது நகைகளை அடமானம்வைத்திருந்த விவசாயிகள் பலரும்,கடந்த 4 நாட்களாக வங்கியை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே வங்கித் தரப்பில், வங்கி உதவி பொது மேலாளர் தலைமையிலான தனிக்குழு, வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் விவரங்களை கொண்டு விசாரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் நேற்றும் விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர். இதில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கு திரண்டிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கந்தசாமி கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் இந்த முறைகேட்டை கொண்டுசென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார்.

இந்த நிலையில் விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளில், குறிப்பிட்ட நகைகளின் கண்ணிகளை மட்டும், நகை மதிப்பீட்டாளர் சேகர் நூதனமாக திருடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. விவசாயிகள் வைக்கும் நகையில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் என்ற அளவில் சில கண்ணிகளை மட்டும் எடுத்து மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில், எஸ்பிஐ கேத்தனூர்வங்கிக் கிளை மேலாளர் சுதாதேவி,காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகர் (57) மீது, பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் வங்கியில் குற்றம் இழைத்தல், மோசடிஉட்பட 3 பிரிவுகளின் கீழ் சேகர் மீது போலீஸார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். எத்தனை பேரிடம் நகை மோசடி நடந்துள்ளது என்பது தொடர்பாக, தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in