

திருநெல்வேலி/ஒட்டன்சத்திரம்: தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நீராவி முருகன் திருநெல்வேலி அருகே போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி தாக்கியதில் உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நீராவி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). 1999-ல் தூத்துக்குடி, 2009-ல் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் மற்றும் 2011-ல் தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்குகள், தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்கள், ஆள் கடத்தல், சென்னை உட்பட பல இடங்களில் வழிப்பறி என, 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நகைக் கொள்ளையில் இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
நீராவி முருகனும், அவரது கூட்டாளிகளும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அக்கசாலை விநாயகர் கோயில்தெருவில் உள்ள வீட்டில் தங்கிஇருந்தது குறித்து தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல்லில் இருந்து 5 பேர் அடங்கிய தனிப்படை போலீஸார் திருநெல்வேலி வந்தனர்.
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நீராவி முருகன் காரில் செல்வதாக கிடைத்ததகவலை அடுத்து, தனிப்படை போலீஸார் அந்தக் காரை பின்தொடர்ந்தனர். போலீஸார் பின்தொடர்வதை தெரிந்துகொண்ட நீராவி முருகன், களக்காடு - மீனவன்குளம் குறுக்குச்சாலை வழியாக சென்று, வனப்பகுதிக்குள் தப்பி ஓட முயன்றார்.
போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை, நீராவி முருகன் அரிவாளால் தாக்கி உள்ளார். இதில், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா உட்பட 4 போலீஸாருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில், நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த போலீஸார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக களக்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பார்வையிட்டார். சிகிச்சையில் இருக்கும் போலீஸாரை, மாநகர காவல் ஆணையர் ஏ.டி.துரைக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் ஒருவர் வீட்டில் சமீபத்தில் நடந்த கொள்ளையில் நீராவி முருகன் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் சக்திவேல், புறநகர் பகுதி நாகனம்பட்டியில் ஊருக்கு வெளியே உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கடந்த பிப்.15-ல் நள்ளிரவில் டாக்டர் சக்திவேல் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 4 பேர், டாக்டர், அவரது மனைவி ராணி, டாக்டரின் தாய், தந்தையை கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த ஏராளமான நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
டாக்டர் வீட்டில் இருந்த சொகுசு காரையும் எடுத்துச் சென்றனர். பின்னர் கொடைரோடு டோல்கேட் அருகே காரை விட்டு விட்டு வேறு காரில் தப்பினர்.
டாக்டர் சக்திவேல் அளித்த புகாரில் 150 பவுன் நகை கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டாலும், கூடுதல் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. விசாரணையில் இக்கொள்ளையில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவரைதேடி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் சில நாட்களாக திண்டுக்கல் எஸ்பி, தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர்.