

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மன்னங்கோவில் கிராமத்தில் உள்ள மன்னார்சாமி, நல்ல காத்தாயி கோயிலுக்கு சொந்தமான நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலையீஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடுபோனது.
இதுகுறித்து சமீபத்தில் ஏனாக்குடியைச் சேர்ந்த வீரமணி என்பவர் தந்த புகாரின்பேரில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பாக, சீர்காழியை அடுத்த நெம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயில் குருக்கள் சூரியமூர்த்தி(75) என்பவரிடம் நேற்று முன்தினம் விசாரித்தனர். அப்போது, கோயில் கருவறையில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவர் மறைத்து வைத்திருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலைகள் மற்றும் இந்து சமய அறநிலையதுறை அனுமதி இல்லாமல் சூரியமூர்த்தியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காத்தாயி அம்மன் வெள்ளிக் கவசம் 1, சிறிய வெள்ளி குத்துவிளக்குகள் 2, வெள்ளிக் குடம் 1, சனீஸ்வரன் வெள்ளிக் கவசம் 1 ஆகியவற்றை போலீஸார் மீட்டனர்.
இதையடுத்து, குருக்கள் சூரியமூர்த்தியை கைது செய்த போலீஸார் சிலைகள், பொருட்களை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். இவை எந்தக் கோயிலைச் சேர்ந்தவை என விசாரணை நடத்திவருகின்றனர்.