

தருமபுரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சிட்லகாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (25). இவர் அப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அருகில் வசிப்பவர் செல்வம் மகன் ரஞ்சித் (22). குணசேகரனின் வீடு மற்றும் கடையை ஒட்டி ரஞ்சித் வீடு கட்டும் பணி மேற்கொண்டு வருகிறார். இப்பணியின் போது கட்டுமானப் பொருட்கள் விழுந்து குணசேகரனின் வீட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக குணசேகரனின் தந்தை முனுசாமிக்கும், ரஞ்சித்துக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்புக் கம்பியால் ரஞ்சித் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்தகுணசேகரன் கண்ணாடியால் குத்தியதில் பலத்த காயங்களுடன் ரஞ்சித் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர் பாக பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, நல்லம்பள்ளி வட்டம் கழனிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (57). இவரின் மனைவி மாதம்மாள் (52). இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காந்தி குடும்பத்தாரை பிரிந்து அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மகன், மருமகள் வீட்டில் இல்லாத நிலையில் தனியாக இருந்த மாதம்மாளிடம் காந்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் தொடர்ச்சியாக மாதம்மாளை, காந்தி அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவத்தில் மாதம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீஸார் காந்தியை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
இவைதவிர, அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி அருகிலுள்ள ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி தனது 4 குழந்தைகளுடன் சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். அவருக்கு துணையாக, ராஜேஸ்வரியின் தாயார் இந்திராணி (56) மகளுடனே தங்கி இருந்தார். அவ்வப்போது கூலி வேலைகளுக்கும் சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வீட்டருகே தலைப் பகுதியில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது அவர் உயிரிழந்தார். இந்திராணி என்ன காரணத்துக்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்குமாறு அவரது மருமகள் சிலம்பரசி அளித்த புகாரின்பேரில் மொரப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஒரே நாளில் தருமபுரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.