குமரி கடல் வழியாக கனடாவுக்கு இலங்கை தமிழர்கள் 70 பேர் தப்பிச்செல்ல உதவிய பெண் கைது

குமரி கடல் வழியாக கனடாவுக்கு இலங்கை தமிழர்கள் 70 பேர் தப்பிச்செல்ல உதவிய பெண் கைது
Updated on
1 min read

கனடாவுக்கு குமரி கடல் வழியாக இலங்கை தமிழர்கள் 70 பேர் தப்பிச்செல்ல உதவிய பெண் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வழியாக இலங்கை தமிழர்கள் 70-க்கும் மேற்பட்டோர், 2021 நவம்பர் மாதம் படகு மூலம் கனடாவுக்கு தப்பிச் சென்றனர். டிகோகிரேசியா தீவு அருகே சென்றபோது, இங்கிலாந்து கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, குமரி மாவட்ட கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தலைமையில், இவர்கள் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. கருணாநிதி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, குளச்சலைச் சேர்ந்த ஜோசப்ராஜ், மதுரை கூடல்நகரைச் சேர்ந்த சுகந்தன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கருணாநிதியின் சித்தியான, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஈஸ்வரி (50) என்பவரும், இச்சம்பவத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவியது தெரியவந்தது. போலீஸார் நேற்று ஈஸ்வரியைக் கைது செய்து, குமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தக்கலை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்ய கியூ பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in