Published : 15 Mar 2022 08:04 AM
Last Updated : 15 Mar 2022 08:04 AM

நகைக் கடை உரிமையாளர் காருடன் கடத்தல்; மதுரை அருகே ரூ.2.50 கோடி கொள்ளையில் 3 பேர் கைது: கார் ஓட்டுநரே சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுடன் மதுரை எஸ்பி பாஸ்கரன் மற்றும் தனிப்படையினர்.

மதுரை: மதுரை நகைக்கடை உரிமையாளரை காரில் கடத்தி ரூ.2.50 கோடி கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது கார் ஓட்டுநரே சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிந்தது.

மதுரை அரசரடியில் நகைக்கடை வைத்திருப்பவர் தர்மராஜ்(61). இவர் நாகர்கோவிலில் நகைகள் வாங்கத் திட்டமிட்டு தனது கடை ஊழியர் கோவிந்தராஜனுடன் நேற்று முன்தினம் காரில் புறப்பட்டார். காரை மதுரை விளாச்சேரி மொட்டைமலையைச் சேர்ந்த ஓட்டுநர் பிரவீன்குமார்(26) ஓட்டினார்.

திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கில் சென்றபோது ஓட்டுநரும், ஊழியரும் சிறுநீர் கழிக்க காரைவிட்டு இறங்கினர். அப்போது, திடீரென அங்கு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி காருடன் தர்மராஜை கடத்திச் சென்றனர். இதுகுறித்து ஓட்டுநர் பிரவீன்குமார், கடை ஊழியர் கோவிந்தராஜன் ஆகியோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் சந்தேக வாகனங்களை கண்காணித்தனர். மேலும், கடத்தல்காரர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சேடப்பட்டி அருகிலுள்ள அத்திப்பட்டியில் அன்று மாலை தர்மராஜை மட்டும் இறக்கிவிட்டு அவரிடம் இருந்த ரூ.2 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம்மற்றும் ஒரு மோதிரம், ஒருசெல்போனை பறித்துக்கொண்டு அடுத்தடுத்து வேறுகாரில் தப்பிச் சென்றுள்ளனர்.

தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் ஓட்டுநர் பிரவீன் குமாரிடம் தீவிர விசாரணை செய்தனர். அதில் உரிமையாளருடன் பணம் கொண்டு செல்வதை தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களான முருகன் மகன் அருண்குமார், உக்கிரபாண்டி மகன் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி கொள்ளைத் திட்டம் அரங்கேறியது தெரியவந்தது.

இதற்கிடையே, திண்டுக்கல்லில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கொள்ளையர்கள் அருண்குமார், அலெக்ஸ்பாண்டியனைப் பிடித்த தனிப்படையினர், அவர்களிடம்இருந்து கொள்ளையடித்த முழுத் தொகை, மோதிரம் மற்றும் செல்போனை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஓட்டுநர் பிரவீன்குமார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தனிப்படையினரை டிஐஜி பொன்னி, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் போலீஸார் கூறும்போது, “அதிக பணம் கொண்டு செல்லும்போது வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். வாகனத்தின் முன்பும் பின்புறமும் உள்ளே சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். பாதுகாப்புக்கென துப்பாக்கி உரிமம் கொண்ட நபரை அழைத்துச் செல்ல வேண்டும். தேவையெனில் சொந்தமாக துப்பாக்கி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

வாகனங்களில் லாக்கர் வசதி ஏற்படுத்தவேண்டும். வழியில் தேவையின்றி வாகனத்தை நிறுத்தக் கூடாது. வழியிலுள்ள காவல் நிலைய தொடர்பு எண்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இடர்பாடு ஏற்படும்போது காவல் அவசர அழைப்பு எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x