

கோவையில் வாங்கிய கடனை திருப்பி தராத சலூன் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்து முன்னணி நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தெலுங்குபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார்(37). அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்புதூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ராம்ஜி(47) என்பவர் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பைனான்ஸியர் இளங்கோவிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், சசிகுமார் தொகையை திருப்பித் தரவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் சசிகுமார் வீட்டுக்குச் சென்ற ராம்ஜி, இளங்கோ ஆகியோர் பணத்தை திருப்பி தருமாறு வலியுறுத்தியுள்ளனர். சசிகுமார் மறுக்கவே அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளங்கோ, ராம்ஜி ஆகியோர் கத்தியால் சசிகுமாரை குத்தி விட்டு தப்பினர். இதில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற செல்வபுரம் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோ, ராம்ஜி ஆகியோரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராம்ஜி, இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட துணைச் செயலராக உள்ளார்.