

திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம், 188-வது வட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). இவர் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில் செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கொலையாளிகளை மடிப்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்பட உள்ள தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பிப். 3-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்.15-ம் தேதி தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய நபரான அருணின் உறவினரான முருகேசன்தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும், அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை, அருண் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீஸார் வியாசர்பாடியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கெனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அடிப்படையிலும், அவர்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையின் தலைவன் என்பதாலும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.