

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ் 1 படித்து வரும் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நேற்று மாலை பள்ளியின் மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த கணியூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘பள்ளியில் நடைபெற்ற திருப்புதல் தேர்வில், மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆசிரியர் அடித்ததாகவும், தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு பின்னரே மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக, சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்டபோது, ‘‘மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் ஆசிரியர்களிடமும், கண்காணிப்பாளரிடமும் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது.
முழுமையான விசாரணைக்கு பின்பே உண்மையான காரணம் தெரியவரும்’’ என்றார். உயிரிழந்த மாணவரின் உறவினர்கள், சக மாணவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.
மாணவர் தற்கொலை செய்துகொண்டதால், இன்று (மார்ச் 15) கணியூர் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.