

தென்காசி/ நாகர்கோவில்: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைசேர்ந்த கணேசன், மாடத்தி தம்பதியரின் மகள் இந்து பிரியா(18).
கணேசன் ஏற்கெனவே இறந்துவிட்டார். தாயாருடன் வசித்து வந்த இந்து பிரியா, டி.என்.புதுக்குடியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், இந்து பிரியா இறந்து கிடந்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை புளியங்குடி போலீஸார் கைப்பற்றினர்.
அதில், “வேறொரு மாணவி கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்திருந்தார். அதை நான் கொண்டு வந்ததாகக் கூறி பேராசிரியர்கள் முத்துமணி, வளர்மதி ஆகியோர் திட்டினர். எனது தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம்” என எழுதியிருந்தார். விசாரணைக்கு பின் பேராசிரியர்கள் முத்துமணி, வளர்மதி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பேராசிரியர் இடைநீக்கம்
கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் வாசுதேவன்(45), மாணவி ஒருவரின் செல்போனுக்கு இரவு நேரத்தில் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 4 பிரிவு களில் வாசுதேவன் மீது தென் தாமரைக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கல்லூரி நிர்வாகமும் மாணவிகள், வாசுதேவனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியது. பின்னர், வாசுதேவனை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.