கோவை: காவலர் குடியிருப்பில் திருடிய முன்னாள் காவலர் கைது - 30 பவுன் நகைகள் மீட்பு

கோவை: காவலர் குடியிருப்பில் திருடிய முன்னாள் காவலர் கைது - 30 பவுன் நகைகள் மீட்பு
Updated on
1 min read

கோவையில் காவலர் குடியிருப்பில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கோவை-அவிநாசி சாலை காவலர் பயிற்சி பள்ளி வளாகத் தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் கடந்த ஆண்டு வெவ்வேறு தேதிகளில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை, பணம் மற்றும் மடிக்கணினி, அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் திருடப் பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை நடத்தினர்.

இச்சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வந்ததும், பணியில் இருந்தபோது கடந்த 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆயுதப்படை வாகனத்தை கடத்தி சென்று ஏரியில் தள்ளி விட்டதும், அதனால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும், பிறகு பணத்துக்காக போலீஸாரின் வீடுகளை நோட்டமிட்டு, தன்னை காவலர் எனக் கூறி பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சமீபத்தில், ஒரு குற்ற வழக்கில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போலீஸார் அவரை கைது செய்து விசாரித்தபோது, கோவையில் காவலர் குடியிருப்பில் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரியில் சிறையில் இருந்த அவரை, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்று முன்தினம் முறைப்படி கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி, 30 பவுன் தங்க நகைகள், பணம், அலைபேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கோவையில் வைத்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in