

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள டி.பி.சாலையை சேர்ந்தவர் சதீஷ் (57). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் அளித்த புகாரில், ‘எனக்கு சில நாட்களுக்கு முன்னர், அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பிரிவு ஊழியர் என தெரிவித்தார். எனது கிரெடிட் கார்டு லெவல் அதிகரித்து தருவதாக கூறினார். இதை நம்பி, அவர் கேட்ட விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்தேன். பின்னர் எனது எண்ணுக்கு வந்த இரண்டு ஓடிபி எண்களை தெரிவிக்குமாறு கூறினார். நானும் அந்நபரிடம் ஓடிபி எண்களை தெரிவித்தேன். சிறிது நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.86,369 தொகை திருடப்பட்டது, தெரியவந்தது. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் குற்றங்கள் என்றால் என்ன, அதில் சிக்காமல் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினர் மூலம் பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில், துண்டுப்பிரசுரம் வழங்கியும், நேரடியாக பொதுமக்களிடையே அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.