Published : 12 Mar 2022 04:15 AM
Last Updated : 12 Mar 2022 04:15 AM
கோவை: ஆசிரம உரிமையாளரை கடத்தி ரூ.35 லட்சம் பறித்த மர்ம நபர்கள் யாரென போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை தீத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்(46). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், பேரூர் போலீஸில் சரவணன் நேற்று புகார் அளித்தார். அதில்,‘‘ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆசிரமம் நடத்தி வருகிறேன். கடந்த 6-ம் தேதி குடும்பத்தினரைப் பார்க்க கோவைக்கு வந்தேன். 8-ம் தேதி வீடு அருகே நான் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் வந்த 5 பேர் என்னை தடுத்து நிறுத்தினர். தாங்கள் போலீஸார், விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி என்னை அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னரே, அவர்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அந்நபர்கள் முதலில் ரூ.1 கோடி கொடுத்தால்தான் என்னை விடுவிப்பேன் என மனைவியிடம் போனில் மிரட்டியுள்ளனர். பின்னர், ரூ.35 லட்சம் தர வேண்டும் என கட்டாயப்படுத்தினர். மனைவி அத்தொகையை கொடுத்த பின்னர், திருச்செங்கோடு - சங்ககிரி பிரதான சாலையில் நேற்று முன்தினம் என்னை இறக்கிவிட்டு தப்பினர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 2 தனிப்படையினர் திருச்செங்கோட்டுக்கு சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT