

திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (49). இவர் யூனியன் மில் சாலை கேபிஎன் காலனி 3-வது வீதியில் நகை விற்பனை மற்று அடகுக் கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ம் தேதி நள்ளிரவு இக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மகும்பல் கடையில் இருந்த 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 15 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றது.
சிசிடிவி கேமராக்களைக் கொண்டு திருப்பூர் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்ஷா ரயில் நிலையத்தில் வைத்து, மகதப் ஆலம் (27), பத்ருல் (20), முகமது சுபான் (30), திலகஸ் (20) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நகைக்கடையை நோட்டமிட்டு, தகவல் அளித்த முர்டஷா (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் லட்சுமி நகரில் பனியன்களுக்கான பட்டன் கடையை முர்டஷா நடத்தி வந்துள்ளார். திருப்பூருக்கு மகதப் ஆலம் வந்தபோது, நகைக் கடையை கொள்ளையடிக்க முர்டஷா திட்டம் வகுத்துக்கொடுத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்,’’ என்றனர்.