Published : 12 Mar 2022 07:32 AM
Last Updated : 12 Mar 2022 07:32 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு சில மணி நேரத்தில் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 1500 புறநோயாளிகள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். 750-க்கும் மேற்பட்ட படுக்கைகள் வசதி உள்ள இந்த மருத்துவமனையில் 63 மருத்துவர்கள், 140-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 400 பேர் பணியாற்றுகின்றனர்.
இங்கு ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்பலத்தை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவிசுஜாதா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இவர்களுக்கு 3 நாட்களுக்கு முன்பு மகப்பேறு பிரிவில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை குழந்தையைப் படுக்கையில் போட்டுவிட்டு சுஜாதா கழிப்பறைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதுதொடர்பாக மருத்துவ அலுவலர்களிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனையின் அனைத்து வாயில் கதவுகளும் பூட்டப்பட்டன.
ஆனால், அதற்குள் குழந்தையைக் கடத்தியவர்கள் வெளியே சென்றுவிட்டனர். அப்போது மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், குழந்தை காணாமல் போனதால் மருத்துவமனை கதவுகள் பூட்டப்பட்டுள்ளதை அறிந்தார். அப்போது அவர், “சிறிது நேரத்துக்கு முன் என்னை அழைத்த இருவர், அவசரமாகப்பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று கூறினர். அவர்களைப் பேருந்துநிலையத்தில் விட்டுவிட்டு வந்தேன்.அவர்கள் குழந்தையைக் கடத்தியவர்களாக இருக்கலாம்” என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினார்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்கப்பட்டது. உடனே போலீஸார் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையைக் கடத்தியவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ராமு, சத்யா என்பது தெரியவந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனை நிர்வாகம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், குழந்தையைக் கடத்தியவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT