

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 1-ம் தேதி அதிகாலை பாலமுருகன் வீட்டுக்கு சொகுசு காரில் வந்த, பெண் உட்பட 7 பேர், தங்களை வருமானவரித் துறை அதிகாரி என கூறிக் கொண்டு, வீட்டிலிருந்த 117 பவுன் நகை, ரூ.2.25 லட்சம் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து பாலமுருகன், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், ஆவடி துணை ஆணையர் மகேஷ் மேற்பார்வையில், பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக, கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த டேனியல், நந்தகுமார், சிவமுருகன், பிரகாஷ், வினோத், ரென்னிஸ், அஸ்கர் அலி, சாரதி என்கிற பார்த்தசாரதி, கவிதா மற்றும் செவ்வாப்பேட்டையை சேர்ந்த வசந்த், செந்தில்வேலன், அரக்கோணத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 12 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் ரைஸ் புல்லிங் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வசந்த், செந்தில்வேலன், வெங்கடேசன் ஆகிய மூவரும், பாலமுருகன் வசதியானவர் எனத் தெரிந்து அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அத்திட்டத்தை செயல்படுத்த கோவையைச் சேர்ந்த பார்த்தசாரதி மூலம் ஆட்களைத் திரட்டி, பாலமுருகன் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் போல் சென்று, நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். ஒப்பந்தத்தின்படி வெங்கடேசன், பார்த்தசாரதி கூட்டாளிகள் கொள்ளையடித்த பணம், நகைகளை சமமாக பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 44 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.