Published : 10 Mar 2022 04:15 AM
Last Updated : 10 Mar 2022 04:15 AM

காவல்துறை, ஐடி அதிகாரி எனக் கூறி மோசடி: 36 வழக்குகளில் தொடர்புடையவர் திருப்பூரில் கைது

கைது செய்யப்பட்ட அப்துல் சலீம்

ஈரோடு

காவல்துறை, வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி, மோசடி செய்து, பணம் பறித்த 36 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை ஈரோடு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (66). இவர், ஆனைக்கல்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த நபர், தன்னை வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி சோதனை செய்துள்ளார். குழந்தைவேலு அணிந்திருந்த தங்கமோதிரத்திற்கு ஆவணம் இல்லை எனக்கூறி, அதனை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடந்தது.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (73) என்பவர், கொல்லம்பாளையம் வந்து சென்றபோது, வனத்துறை அதிகாரி எனக் கூறி மிரட்டி, அவரது ஒரு பவுன் மோதிரத்தை ஒருவர் பறித்துச் சென்றார். எழுமாத்தூர் காட்டுவலசு பகுதியில் நிலக்கடலை வியாபாரி மணி(55)-யிடம், வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி, அவர் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகார்களை விசாரித்த போலீஸார், இச்சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என உறுதி செய்தனர். குற்றவாளியைப் பிடிக்க ஈரோடு நகர டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீஸாரின் விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமராஜர் நகரைச் சேர்ந்த அப்துல் சலீம் (65) எனத் தெரியவந்தது. திருப்பூரில் பதுங்கி இருந்த அப்துல் சலீமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, ஓய்வுபெற்ற உயர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் அப்துல் சலீம் சில நாட்கள் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். இதில், அதிகாரிகளின் செயல்பாடுகள், பேச்சுமுறை குறித்தெல்லாம் அறிந்து கொண்ட சலீம், தன்னை போலீஸ் அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி முதியவர்களாகத் தேர்வு செய்து, அவர்களை மிரட்டி, பல்வேறு இடங்களில் பணம் பறித்து வந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இவர்மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட அப்துல் சலீமிடம் இருந்து ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

கைது செய்யப்பட்ட அப்துல் சலீம், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x