வேலூர்: ரயிலில் சிக்கி இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: ரயிலில் சிக்கி இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

வேலூர்: வேலூர் அருகே மற்றும் வாலாஜா அருகே ரயிலில் சிக்கி இளைஞர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் கண்டோன்மென்ட் - பென்னாத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள், காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா உத்தரவின் பேரில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முரளி மனோகரன் மற்றும் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உயிரிழந்த முதியவர் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முதியவர் வெள்ளை நிற வேட்டியும், அதே நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

மற்றொரு சம்பவம்

அதேபோல, வாலாஜா - முகுந்தராயபுரம் ரயில் நிலையம் இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய காட்பாடி ரயில்வே காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்த இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்துக்கு 94981-01961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in