Published : 09 Mar 2022 05:10 AM
Last Updated : 09 Mar 2022 05:10 AM
மதம் மாற எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தையை கொல்ல திட்டமிட்ட 5 பேர் அடங்கிய கூலிப்படையினரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். நகைப் பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் அருண்குமார்(27), ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே நகரில் பணியாற்றிவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா ஆன்மிகா என்பவரும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கோவை செல்வபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், சஹானா ஆன்மிகா கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இச்சூழலில், ஆன்லைன் மூலமாக செல்வபுரம் பகுதிக்குட்பட்ட இளைஞர் ஒருவர், கொல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரியிடம் துப்பாக்கி கேட்டு ஆர்டர் செய்துள்ளார். இத்தகவல் பரிமாற்றங்களை ரகசியமாக கண்காணித்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள், கோவை மாநகர போலீஸாரை உஷார்படுத்தினர். இதையடுத்து, செல்வபுரம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை போலீஸார் ரோந்து சென்றபோது, செல்வபுரத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் உக்கடத்தில் பதுங்கியிருந்த மேலும் நால்வரைப் பிடித்தனர். காதல் திருமணம் செய்த அருண்குமாரின் தந்தை குமரேசனை கொல்ல திட்டமிட்டு வந்ததாக பிடிபட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து செல்வபுரம் போலீஸார் கூறியதாவது: பிடிபட்டவர்கள் திருச்சியைச் சேர்ந்த சதாம்உசேன்(29), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்வீர் என்ற அஜய்(21), சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பக்ருதீன்(54), திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான்(34), ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா(47) எனத் தெரியவந்தது.
சமீபத்தில் அருண்குமாரிடம் பேசிய பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர், அவரை பெண்ணின் மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளார். அவர் மாற மறுத்துவிட்டார். இதையறிந்த அவரது தந்தை குமரேசனும், மகன் எந்த மதத்துக்கும் மாற மாட்டார் என உறுதியாக தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டைச் சேர்ந்த அந்த நபர், குமரேசனை கொல்ல முடிவு செய்து, வாட்ஸ்அப் குழு மூலம் சதாம்உசேன், பக்ருதீன் ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் மூலம் இம்ரான் கான், முகமது அலி ஜின்னா, ராம்வீர் அஜய் ஆகியோர் இணைந்துள்ளனர்.
கூலிப்படையை சேர்ந்த ஐவரும், குமரேசனின் புகைப்படம் மற்றும் முகவரியை வைத்துக் கொண்டு, 2 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்துள்ளனர். கூலிப்படையிடம் குமரேசனின் பழைய வீட்டு முகவரி இருந்துள்ளது.
சமீபத்தில் அவர் வீடு மாறியதால் கூலிப்படையினரின் கண்ணில் சிக்கவில்லை. அதற்குள் கும்பல் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டது. 5 பேர் மீதும் கூட்டுச்சதி, மதமோதலை ஏற்படுத்த முயற்சி, ஆயுதங்கள் வைத்திருத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்கு திட்டமிட்டுக் கொடுத்த பெண்ணின் வீட்டைச் சேர்ந்த நபரைப் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT