Published : 09 Mar 2022 05:00 AM
Last Updated : 09 Mar 2022 05:00 AM

தருமபுரியில் ஆன்லைன் முறையில் ரூ.18,000 நூதன மோசடி: 48 மணி நேரத்தில் மீட்ட சைபர் கிரைம் போலீஸ்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ஆன்லைன் முறையில் திருடப்பட்ட பணத்தை சைபர் கிரைம் போலீஸார் 48 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். அண்மையில் இவரது வங்கிக் கணக்கில் இருந்து இவருடைய அனுமதி பெறாமல் ரூ.2,000 பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதையறிந்த கார்த்திக், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் அளிக்க தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடியுள்ளார். அதில் கிடைத்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசியவர்கள் கார்த்திக்-ன் செல்போனில் ‘எனிடெஸ்க்’ என்ற அப்ளிகேஷனை நிறுவுமாறு கூறியுள்ளனர். அவர் அதைச் செய்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,000 பணம் மாயமானது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். புகார் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள்ளாக தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அந்தப் பணத்தை மீட்டனர்.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி புஷ்பராஜ், பணத்தை பறிகொடுத்த கார்த்திக் வசம் அந்தத் தொகையை வழங்கினார்.

மேலும், அவர் கூறும்போது, ‘சைபர் கிரைம் வகையிலான பண மோசடிகள் தொடர்பாக 1930 என்ற உதவி எண் மூலம் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கலாம். மோசடி நடந்ததை அறிந்த உடன் உதவி எண்ணை தொடர்பு கொண்டால் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இணைய முகவரியிலும் புகார் அளிக்கலாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x