போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் 7 பேர் கைது: 76 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பவுடர் பறிமுதல்

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் 7 பேர் கைது: 76 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பவுடர் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 76 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய ‘போதைப் பொருள் தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ளஅனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் வ.உ.சி.நகர் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்னர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் பையுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் போதைப் பவுடர் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரோஹித் மணிகண்டன் (26) என தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் எடை கொண்ட மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரோஹித் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல சென்னை முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 76.5 கிலோ கஞ்சா, போதைப் பவுடர், 1,101 நைட்ரோவிட் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in