

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்.14-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலூர் போலீஸில் பெற்றோர் புகார் செய்தனர்.
போலீஸார் விசாரணையில், அச்சிறுமி அதே ஊரைச் சேர்ந்த சுல்தான் என்பவர் மகன் நாகூர்ஹனிபாவை(22) காதலித்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் எனவும் தெரிய வந்தது.
இந்நிலையில் மார்ச் 3-ம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார்மதினாபேகம், அச் சிறுமியை மயக்க நிலையில், அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.
சிறுமியின் தாயார் தன் மகளை மேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தார்.
3 தனிப்படை விசாரணை
இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருப்பூர், சென்னை, மதுரையில் விசாரித்தனர்.
இதையடுத்து மேலூர் போலீஸார் போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்து காதலன் நாகூர் ஹனிபா, அவரது நண்பர்கள் திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, சாகுல் ஹமீது, தாயார் மதினாபேகம், தாய் மாமா மனைவி ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள், நாகூர் ஹனிபாவின் தந்தை சுல்தான் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: நாகூர் ஹனிபா அச்சிறுமியை காதலித்ததால் பிப்.14-ல்மதுரையில் உள்ள நண்பர் பெருமாள் கிருஷ்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஈரோடு பள்ளிப்பாளையத்தில் உள்ள சித்தப்பாஇப்ராஹிம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இருவரும் கணவன், மனைவி போல இருந்ததாகத் தெரிகிறது.
சிறுமியை போலீஸார் தேடுவதை அறிந்ததால், இருவரும் விஷம் சாப்பிட்டுள்ளனர். நாகூர் விஷத்தை துப்பி விட்டார். சிறுமி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஊருக்கு அழைத்து வந்து தாயார் மதினா மூலம் மார்ச் 2-ம் தேதி இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு தலைமறைவானார்.
மயங்கிய நிலையில் இருந்த அச்சிறுமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மருத்துவ அறிக்கையில் சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை. சிறுமியின் உடலில் வேறு காயம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கிறோம் என்றனர்.
பாஜக மறியல்
இதனிடையே பாஜக, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்பினர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும், நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும், சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர். அப்போது திருச்சி சென்ற பஸ் மீது சிலர் கல் வீசி தாக்கினர். இதனால் அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.