

விழுப்புரம் அருகே தங்க கட்டி என தங்க முலாம் பூசிய கட்டி கொடுத்து ரூ. 1.50 லட்சம் ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் மனைவி கவிதா (30). இவர் நன்னாடு கிராமத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குகடந்த சில மாதங்களுக்கு முன்புஆந்திராவை சேர்ந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வந்து, கவிதாவிடம் நட்பாக பழகியுள்ளனர்.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 4-ம் தேதி மீண்டும் அவர்கள் கவிதா கடைக்கு வந்தனர். ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிராம் எடையுள்ள தங்கக்கட்டி இருப்பதாகவும், அதனை பெற்றுக் கொண்டு பணம் தரும்படியும் கவிதாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு கவிதா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்படியானால் இருக்கும் பணத்தை தரும்படியும், மீதியுள்ள பணத்தை பின்னர் வந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். உடனே கவிதா, தன்னிடம் இருந்த ரூ.1.50 லட்சத்தை கொடுத்து அந்த தங்கக்கட்டியை பெற்றுக்கொண்டார். பின்னர் பரிசோதித்து பார்த்தபோது, அது தங்கக்கட்டி இல்லை. தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கட்டி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கவிதா எனதிரிமங்கலம் என்ற இடத்தில் அவர்கள் இருவரையும் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோகுல்பாடு சத்திரம்பிள்ளை என்ற பகுதியைச் சேர்ந்த துர்காராவ் (50), அங்க மாராவ் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து துர்காராவ், அங்கமாராவ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.