

தேவகோட்டையில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1.35 லட்சம் ரொக்கம், எல்இடி டிவிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேவகோட்டை அண்ணாசாலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் இரு தினங்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் அருளானந்தம். இவரும் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை இருவரது வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வீடுகளுக்குள் சென்று பார்த்தபோது, கோவிந்தசாமி வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் எல்இடி டிவியும், அருளானந்தம் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் 2 வெள்ளி கொலுசுகள், எல்இடி டிவி திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.