கோவையில் அஜித் படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞர் கைது

கோவையில் அஜித் படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞர் கைது
Updated on
1 min read

கோவையில் திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம், கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம், கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. அன்றைய தினம் அதிகாலையில் ரசிகர்கள் காட்சி என்பதால், ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன்பு திரண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை திரையரங்கு வளாகத்தின் முன்பு வீசிவிட்டு தப்பினர்.

இந்த பாட்டில் திரையரங்கு முன்பு சாலையில் விழுந்து வெடித்தது. இதில் அங்கிருந்த ரசிகர் ஒருவர் காயமடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனமும் சேதமடைந்தது.

காட்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் அழைப்புகள் போன்றவற்றை அடிப் படையாக வைத்து விசாரித்தனர். இதில், பெட்ரோல் குண்டு வீசியவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்(27) என தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘கைதான லட்சுமணன் ரத்தினபுரியில் தங்கியிருந்து பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 24-ம் தேதி நண்பர்கள் 4 பேருடன் இரு சக்கர வாகனங்களில் திரையரங்குக்கு வந்துள்ளார். அங்குள்ள ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ.1,500 என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லட்சுமணன் தரப்பினருக்கும், டிக்கெட் விற்பனை செய்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லட்சுமணன் தரப்பினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது, லட்சுமணனுடன் வந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்ல முயற்சித்த போது, திரையரங்கு அருகே கீழே விழுந்துள்ளனர். அங்கிருந்த ரசிகர்கள் இருவரையும் தூக்கிவிட முயற்சித்துள்ளனர்.

இதைப் பார்த்த லட்சுமணன், தன் நண்பர்களை ரசிகர்கள் தாக்குவதாக எண்ணி அங்கு சென்று அவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

பதிலுக்கு லட்சுமணன், அவருடன் வந்த நால்வரையும் ரசிகர்கள் சரமாரியாக தாக்கி அனுப்பியுள்ளனர். தாங்கள் தாக்கப்பட்டதற்கு அந்த டிக்கெட் விற்ற நபர் தான் காரணம் என்று எண்ணிய லட்சுமணன், பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பற்ற வைத்து வீசியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in