

சென்னை: சென்னை விமான நிலையத்தில்மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) ராஜஸ்தான் மாநிலம், நாக்கூர் மாவட்டம், சத்துலவாஸ் கிராமத்தைச் சேர்ந்த யஸ்பால் (26) என்பவர் பணியில் இருந்தார். இவர் 2017-ல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சோ்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணிக்காக மாற்றப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் யஸ்பால் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குள்ள கழிப்பறைக்கு சென்றவர், நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. மேலும், அங்கிருந்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த சக ஊழியர்கள், தூய்மை பணியாளர் மற்றும் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது யஸ்பால் தனதுகையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே வலது பக்க நெற்றியில் சுட்டுகொண்டு சுருண்டு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விமான நிலைய போலீஸார் யஸ்பால் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யஸ்பால் தற்கொலை குறித்துவிமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘யஸ்பால் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். விடுப்பு முடிந்து சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பியுள்ளார்.
அவர் தனது ஊரில் பெண் ஒருவரை காதலித்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து யஸ்பால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணியின்போது உயர் அதிகாரிகள் ஏதேனும் தொந்தரவு கொடுத்ததால் ஏற்பட்ட விரக்தியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்து வருகிறோம்’ என்றனர்.