சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் பணியிடை நீக்கம்

பிரகாஷ்
பிரகாஷ்
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய நீதிமன்ற அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து தலைமை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் மாஜிஸ்திரேட்டாக பொன்பாண்டி (45) பணி புரிகிறார். இவர் நேற்று முன்தினம் காலை நீதிமன்றத்தில் அவரது அறையில் இருந்த போது, அங்கு வந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37). மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தினார்.

இதில், காயம் அடைந்த மாஜிஸ்திரேட் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, பிரகாஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ், ஓமலூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த நிலையில், மேட்டூருக்கு பணி மாறுதல் கேட்டிருந்தார். எனினும், சேலம் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் பொன்பாண்டியிடம் முறையிட்டுள்ளார். இதற்கு அவர், இடமாறுதல் குறித்து மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாஜிஸ்திரேட்டை குத்தியது விசாரணையில் தெரியவந்தது.

கைதான பிரகாஷ் ஓமலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பிரகாஷை பணியிடைநீக்கம் செய்து சேலம் தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபீதா உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in