

திருப்பத்தூர் மாவட்டம் செல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(28). இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காவியா (23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு காவியா குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த பிப்.14-ம் தேதிகோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு, கிருஷ்ணகிரியில் தனியாக வீடு பார்த்து குடித்தனம் போக எண்ணிய காதல் தம்பதியினர் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் செல்லரைப்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றனர். அங்கிருந்து மீண்டும் கந்திலி வழியாக வீடு திரும்பினர். சின்ன கந்திலி மார்க்கெட் அருகே வந்த போது அங்குள்ள வேகத்தடை மீது இரு சக்கர வாகனம் வேகமாக ஏறி, இறங்கிய போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த காவியா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில், அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.