

ஆம்பூரில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட 3 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் பிரசித்திப்பெற்ற நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மகாசிவராத்திரியையொட்டி இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஆம்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து, கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த ஆம்பூர் சாண்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மனைவி கலைச் செல்வியிடம் (62) 3 பவுன் தங்க சங்கிலியும், ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மனைவி கவுரி (42) என்பவரிடம் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியும், ஆம்பூர் சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் மனைவி உமாதேவி (38) என்பவரிடம் 1 பவுன் தங்க சங்கிலியும் பறித்துச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து 3 பெண்களும் நேற்று ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் அடுத்த ஜி.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசா(55). இவர், ஊசூர் - அணைக்கட்டு பிரதான சாலையையொட்டி உள்ள விவசாய நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் ரமேசா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
இது குறித்து அரியூர் காவல் நிலையத்தில் ரமேசா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.