

வள்ளியூர் நகைக் கடையில் 47 பவுன் நகைகளை திருடிய, அந்த கடையின் ஊழியரான இளம்பெண் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடை உள்ளது. வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் இக்கடையை நடத்தி வருகிறார். இங்கு பணகுடியை அடுத்த கலந்தபனை அருகே உள்ள ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் சுபா(22) விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நகைக்கடையின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கடைக்கு சரியாக வரமுடியவில்லை. உடல்நிலை சரியானபின் கடந்த 15-ம் தேதி கடைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது 47 பவுன் நகைகள் மாயமாகியிருந்தன. வள்ளியூர் போலீஸில் புகார் அளித்தார். கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். நகைகளை விற்பனை பிரதிநிதி சுபா திருடி, தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சுபா, அவரது தாயார் விஜயலெட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 41.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து ஏஎஸ்பி சமய்சிங் மீனா கூறும்போது, “நகைக்கடையில் கண்காணிப்பு கேமராவின் மானிட்டர் பழுதாகியிருந்ததால், அதை பழுது நீக்குவதற்காக சர்வீஸ் சென்டருக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதனால், கேமராவில் எதுவும் பதிவாகாது என்று நினைத்து, நகைகளை திருடியுள்ளனர். மானிட்டர் பழுதாகியிருந்தாலும், கேமராவில் காட்சிகள் தொடர்ந்து பதிவாகியிருந்தது.
அதை ஆய்வு செய்தபோதுதான் நகை திருட்டு தெரியவந்தது” என்றார்.