Published : 01 Mar 2022 09:58 AM
Last Updated : 01 Mar 2022 09:58 AM
சென்னை தியாகராய நகர் காவல்மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ராமாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் கிரிஷ் (20) என்பவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது வசந்த் அவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளதை நம்பிய மாணவியும் அவரது இல்லத்துக்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில் ஒருநாள் மிகவும் சோர்வாக இல்லம் திரும்பிய மாணவியை விசாரித்த பெற்றோர், அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதையும், நால்வரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் அறிந்தனர். இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மாணவியின் காதலன் வசந்த் மற்றும் அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார் (25), நங்கநல்லூரைச் சேர்ந்த தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பகுதி நேர உதவி பேராசிரியராக உள்ள பிரசன்னா (32), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விஷால் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக மாணவியை வீட்டுக்கு வரவழைத்து ஹூக்கா வகை போதைப் பொருளை கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 4 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட மேலும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT