

விருதுநகர் அருகே பேராலி சாலையில் கருப்பசாமி நகரில் உள்ள மாரியப்பன் என்பவரது குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீ ஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது கோவைக்கு லாரியில் கடத்திச் செல்ல ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தனர்.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கு 400 மூட்டைகளில் இருந்த 20 டன் ரேஷன் அரிசி, 125 மூட்டைகளில் இருந்த 6.25 டன் கோதுமை, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வைகுண் டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(22), மதுரை பங்கஜம் காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(18), கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன்(22), நாகை ஆதலியூரைச் சேர்ந்த அழகிரி(25) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் குடோன் உரிமையாளர் மாரியப்பன், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சசிக்குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.