Published : 28 Feb 2022 08:27 AM
Last Updated : 28 Feb 2022 08:27 AM

அதிகாரிகளை மிரட்டி பணம் வாங்கியதாக சமூகநலத் துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு

சென்னை

சமூக நலத்துறையில் மதிய உணவு திட்டத்தின் இணை இயக்குநராக இருப்பவர் ரேவதி.

இவர், தனக்கு கீழ் பணிபுரியும் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்ச புகாரை உருவாக்கி, அந்தப் புகார் தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பதாகக் கூறி, அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இணை இயக்குநரின் மிரட்டலை தொடர்ந்து, சேலம், திருநெல்வேலி மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் தலா 3 லட்சம் கொடுத்துள்ளனர்.

லஞ்சப் பணத்தை பெறுவதற்காகவே 6 இடைத்தரகர்களை ரேவதி தனக்கு கீழ் வைத்திருக்கிறார். லஞ்சப் பணத்தை நேரடியாக பெற்றால் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கிக் கொள்வோம் என்று எண்ணிய ரேவதி, தனக்கு கீழ் கோவிந்தராஜன் என்ற நபரை நியமித்து, கோவிந்தராஜனுக்கு கீழ் ராஜ்குமார், காளிசரண், பாபு, விநாயகமூர்த்தி ஆண்ட்ரூ லார்சன் ஆகியோரை வைத்திருக்கிறார். இந்த 6 பேரும் மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து லஞ்ச பணத்தை தங்களுடைய வங்கி கணக்கில் பெற்றிருக்கிறார்கள். அதன் பின்புபணத்தை எடுத்து கோவிந்தராஜன் மூலமாக ரேவதியிடம் லஞ்ச பணத்தை சேர்த்திருக்கிறார்கள்.

வாட்ஸ்அப், ஏடிஎம் டெபாசிட் இயந்திரம் உட்பட பல வழிகளில் லஞ்ச பணம் ரேவதியின் கைகளுக்கு சென்றிருப்பது லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்ச ஒழிப்புதுறையினரின் முதல் கட்ட விசாரணையில், ரேவதி லஞ்சம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் கோவிந்தராஜன், ராஜ்குமார், காளிசரண், பாபு, விநாயகமூர்த்தி ஆண்ட்ரூ லார்சன் ஆகியோர் மீதும்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x