

கடன் அளிப்பதாக கூறி மில் தொழிலாளியிடம் ரூ.1.6 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை சாலைவேம்பு பகுதியை சேர்ந்தவர் ஆர்.செந்தில்குமார் (45). தனியார் மில்லில் ஆபரேட்டராக பணி செய்து வருகிறார். இவர் தேசிய சைபர் கிரைம் புகார் பதிவு தளத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அதில், “கடந்தாண்டு நவம்பர் 25-ம் தேதி எனது அலைபேசி எண்ணுக்கு லட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் ரூ.8.5 லட்சம் கடன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பி, குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அழைத்துப் பேசினேன். மறுமுனையில் பேசியவர்கள் கடன் அளிக்க பதிவுத்தொகை, காப்பீடு கட்டணம் மற்றும் மறைமுக செலவுத் தொகைகள் செலுத்த வேண்டும், பின்னர் தொகை அனைத்தும் திரும்ப வழங்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள் கூறிய தொகையான ரூ.1.6 லட்சத்தை பல்வேறு தவணைகளாக கடந்த 19-ம் தேதி வரை செலுத்தினேன். பணத்தை செலுத்திய பிறகு கடன் அளிப்பதாகக் கூறிய நபர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.