கோவை: இணையதளத்தை பயன்படுத்தி வாடகை வீட்டுக்கு முன்பணம் செலுத்துவதாக நூதன மோசடி

கோவை: இணையதளத்தை பயன்படுத்தி வாடகை வீட்டுக்கு முன்பணம் செலுத்துவதாக நூதன மோசடி
Updated on
1 min read

இணையதளத்தை பயன்படுத்தி வாடகை வீட்டுக்கு முன்பணம் செலுத்துவதாகக் கூறி, நூதன முறையில் ஏமாற்றி வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மனைவி கலைச்செல்வி (46). இவர், தேசிய சைபர் கிரைம் தளத்தில் பதிவு செய்த புகாரில், எங்களுக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு அளிப்பது தொடர்பாக அதற்குரிய இரு இணையதளங்களில் கடந்த ஜனவரி 20-ம் தேதி விளம்பரங்கள் அளித்திருந்தோம். இரு தினங்கள் கழித்து எங்களது வீட்டு அலைபேசி எண்ணுக்கு பேசிய ஒருவர், தன்னை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி என தெரிவித்தார். தொடர்ந்து, வீட்டு வாடகை குறித்து விசாரித்தார். அவரிடம் 6 மாதங்களுக்கான வாடகையை முன்பணமாக அளிக்க வேண்டும் எனக் கூறினோம்.

இதையடுத்து, இணைய ‘லிங்க்’ ஒன்றை தொடர்புடைய நபர் எங்களுக்கு அனுப்பினார். அதனைத் திறந்தவுடன் எங்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,500 பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நபரிடம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறியவர், பிறகு அலைபேசி செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யக் கூறினார். தொடர்ந்து ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி அலைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு எங்களது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.99 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in