கல்லாவியில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக உதவி பொறியாளர் கைது

கல்லாவியில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக உதவி பொறியாளர் கைது
Updated on
1 min read

கல்லாவியில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பெரியகொட்டை குளம் அடுத்த, செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவர் சிறு தொழில் செய்ய, மும்முனை மின்சாரம் பெறுவதற்காக, கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். அதற்குரிய கட்டணம் ரூ.17 ஆயிரத்தையும் அலுவலகத்தில் செலுத்தினார். ஆனால், அவருக்கு மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி அடுத்த செங்காட்டுபள்ளியைச் சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் (42) என்பவரிடம் கிருஷ்ணன் கேட்டார். அப்போது தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உடனே மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜேஷ் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன்., கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். பின்னர், போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை, கல்லாவி அலுவலகத்தில் இருந்த மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷிடம் கொடுத்தார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயகுமார் தலைமையிலான போலீஸார், லஞ்ச பணத்தை உதவி பொறியாளர் ராஜேஷ் பெறும்போது கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராஜேசை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in