

பொன்னேரி: மீஞ்சூரில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாதததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சென்னை செக்யூரிட்டி போலீஸ் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனுக்கும், பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணமாகி, 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜேந்திரனுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே அடிக்கடி வீண் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கையெழுத்திட மறுப்பு
இச்சூழலில், தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த ராஜேந்திரன், நேற்று முன்தினம் மதியம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு பூர்ணிமா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த ராஜேந்திரன், மனைவி பூர்ணிமாவின் இடது கை மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். அதைத் தடுக்க வந்த 10-ம் வகுப்பு படிக்கும் மகள் பத்மினிக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பூர்ணிமா, பத்மினி ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மாலை மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜேந்திரனை, போலீஸார் கைது செய்தனர்.