திமுகவினர் மிரட்டுவதாக புகார்; தேவகோட்டை நகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுகவினர் மிரட்டுவதாக புகார்; தேவகோட்டை நகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்கள் கே.சுந்தரலிங்கம், எஸ்.நிரோஷா, எஸ்.ரமேஷ், ஆர்.ராதிகா உட்பட 15 கவுன்சிலர்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தேவகோட்டை நகராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றோம். மொத்தமுள்ள 27 கவுன்சிலர்களில் தலைவர், துணைத்தலைவரை தேர்வுசெய்ய 14 கவுன்சிலர்கள் இருந்தால் போதும். நாங்கள் 15 கவுன்சிலர்கள் இருப்பதால் எங்களில் ஒருவர் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ தேர்வாக வாய்ப்புள்ளது. திமுகவை சேர்ந்த வரை தலைவர், துணைத் தலைவராகத் தேர்வு செய்யும் நோக்கில் திமுகவினர் எங்களை மிரட்டுகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் மறைமுக தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க பேரம் பேசுகின்றனர். ஆதரவு அளிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் மிரட்டுகின்றனர்.

எங்களுக்கு மார்ச் 4 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், எங்களை போலீஸார் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து மனு தாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தேவகோட்டை டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சிவகங்கை மாவட்ட அதிமுக செயலர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலை மையில் அக்கட்சியினர், போலீ ஸாரிடம் திமுக கவுன்சிலரை நாங்கள் கடத்தவில்லை, எங்கள் மீது திமுகவினர் பொய் புகார் கொடுத்துள்ளனர். எங்கள் கவுன்சிலர்களை போலீஸார் துன்புறுத்தக் கூடாது என கேட்டுக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in