Published : 26 Feb 2022 02:40 PM
Last Updated : 26 Feb 2022 02:40 PM

உடையார்பாளையம் அருகே சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த கு.வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா.இளவரசன். தமிழர் நீதி கட்சி தலைவரான இவர், கடந்த 10-ம் தேதி உடையார்பாளையத்திலிருந்து ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இவரது கார் மீது வெடிகுண்டை வீசி, துப்பாக்கியால் சுட்டுள்ளது.

இதில் தப்பிய சுபா.இளவரசன், இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது: அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமியும், சுபா.இளவர சனும் தமிழர் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் இருந்து வந்தனர். பின்னர், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன்பின், 1996-ல் குவாகம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற ராமசாமி கொலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ராமசாமி யின் மகன்களான தமிழ்மறவன், இளந்தமிழன் ஆகியோர் தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், தனது தந்தை ராமசாமி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டு வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து ராமசாமி மகன்கள் தமிழ் மறவன்(30), இளந்தமிழன்(27) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன் (48), கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியை அடுத்த சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த கலை (எ)ரவிச்சந்திரன்(51) ஆகியோர் கடந்த 21-ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x