

மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் பேரூராட்சி 10-வது வார்டில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவேட்பாளர் நாகராஜ் என்பவரும், சுயேச்சை வேட்பாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அன்று சுயேச்சை வேட்பா ளர் மோகன்தாஸ், தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு மாற்றாக அதி முக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். இதைக் கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் நாகராஜ், மோகன்தாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நாகராஜ் வீட்டிலிருந்தபோது, மோகன்தாஸ் தனது ஆதரவாளர்களுடன் அங்குசென்று நாகராஜை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாகராஜ், மரக் காணம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாகராஜ் மீதான தாக்குதலை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோகன்தாஸ் வீட்டிற்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த மரக்காணம் போலீஸார், சம்பவ இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தி யுள்ளனர்.
மேலும் நாகராஜ், மோகன்தாஸ் தனித்தனியாக அளித்தப் புகாரின் பேரில் 7 பேரிடம் மரக்காணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.