

சோளிங்கரில் வாக்குப்பதிவு முடிந்து வீடு திரும்பிய தேர்தல் 2-ம் நிலை உதவி அலுவலர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சிறு வளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(49). இவர், நெமிலி அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவி யாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு எசையனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சுரேஷ் தேர்தல் 2-ம் நிலை அலுவலராக நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டார்.
வளைவில் பெரிய பள்ளம்
வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்ட பிறகு, இரவு 8 மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் எசையனூரில் இருந்து சோளிங்கர் நோக்கி புறப்பட்டார். வழியில் போதிய வெளிச்சம் இல்லாத வளைவு பாதையில் வாகனத்தை திருப்பியபோது அங்கு சாலை யோரம் இருந்த பெரிய பள்ளத்தில் தனது வாகனத்துடன் தவறி விழுந்தார்.
அந்த பள்ளத்தில் சேறுடன் கலந்த தண்ணீரில் சுரேஷ் விழுந்ததால் உடனடியாக அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.