

திண்டுக்கல் மாவட்ட பாஜக வர்த்தக அணி துணைத் தலைவர் செந்தில்குமார் (37) கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி அருகே கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம் அருகே கண்டித்தான்குளம் மூகாம்பிகைநகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை முன்னீர்பள்ளம் போலீஸார் நேற்று முன்தினம் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கமநாயக்கனூரைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரியவந்தது. அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி வந்து கொலை செய்துவிட்டு, கால்வாயில் வீசி சென்றுள்ளதும், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அவரைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்துள்ளதும் தெரியவந்தது.
முன்னீர்பள்ளம் போலீஸாரும், ஈரோடு தெற்கு போலீஸாரும் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. திண்டுக்கல் மாவட்ட பாஜக வர்த்தக அணி துணைத் தலைவராக செந்தில்குமார் பொறுப்பு வகித்து வந்தார். அங்கு டிராவல்ஸ் நடத்தி வந்த அவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அப்பெண்ணின் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி ஈரோட்டிலிருந்து செந்தில்குமாரை சிலர் செல்போனில் அழைத்து, திருநெல்வேலிக்கு ஒரு திருமண வீட்டுக்கு செல்ல வாடகை கார் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி ஈரோடுக்கு தனது நண்பர் சீனிவாசனுடன், செந்தில்குமார் காரில் சென்று, தன்னை அழைத்தவர்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்கு வந்துள்ளார். வரும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நான்கு வழிச்சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி சீனிவாசனை காரில் இருந்தவர்கள் இறக்கிவிட்டுள்ளனர். பின்னர், செந்தில்குமாரை கொலை செய்து முன்னீர்பள்ளம் கால்வாயில் வீசியுள்ளனர். பின்னர், செந்தில்குமாரின் காரிலேயே ஈரோட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். காரில் 5 நபர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமியிடம், நடந்த விவரத்தை சீனிவாசன் தெரிவித்ததை அடுத்து, ஈரோடு தெற்கு போலீஸில் செந்தில்குமார் காணாமல்போனது குறித்து, அவரது மனைவி கடந்த 15-ம் தேதி புகார் செய்திருந்தார். இந்நிலையில்தான் முன்னீர்பள்ளம் கால்வாயில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனிவாசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.