Published : 18 Feb 2022 08:29 AM
Last Updated : 18 Feb 2022 08:29 AM

சொத்துக்காக குண்டு வைத்து தாயை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சொத்துக்காக தாயை குண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள்(74). இவருக்கு மூன்று மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர்பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன்கள், மகளுக்கு திருமணம் செய்து வைத்த முத்தம்மாள் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்தார். இளைய மகன் செல்வகுமார் (42) தன்னை கவனித்துக் கொள்ளாததால் சொத்துகளை மற்ற மகன் மற்றும் மகள்கள் மீது எழுதி வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், முத்தம்மாளை கொலை செய்யமுடிவு செய்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெடி மருந்தை வாங்கி வந்து அதை ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பெட்டியைத் திறந்தால் வெடிக்கும் வகையில் உருவாக்கினார். அதனை முத்தம்மாள் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி அன்று வைத்துள்ளார். வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த முத்தம்மாள் வெடிகுண்டு பெட்டியை திறக்கும்போது அது வெடித்து உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த வி.களத்தூர் காவல் துறையினர் செல்வகுமார், பூபதி, சரவணன், லூகாஸ் அந்தோணி, மணிகண்டன் ஆகிய 5 பேரைகைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரித்தார். வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் லூகாஸ் அந்தோணி இறந்து விட்டார். அரசு தரப்பில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 38 ஆவணங்கள் 21 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஹெச்.இளவழகன் நேற்றுதீர்ப்பளித்தார். அதில், செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும்அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த குற்றத்தில் பூபதி, சரவணன், மணிகண்டன் ஆகியோர் குற்ற எண்ணத்துடன் செயல்படவில்லை என்று கூறி அவர்களை நீதிபதி விடுதலை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x