

விருதுநகர்: ரூ. 23.08 லட்சம் முறைகேடு செய்ததாக விருதுநகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அலுவலர்கள் 4 பேர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஒன்று விருதுநகர் சூலக்கரையில் அமைந்துள்ளது. அண்மையில் அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்தபோது அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை முறைகேடாக இருப்பு வைத்தும் விற்பனை செய்தும் ரூ.23.08 லட்சம் முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக தரக்கட்டுப்பாட்டு அலுவலர் துரைராஜ், இளநிலை உதவியாளர் ஸ்டாலின் ராஜா, பட்டியல் எழுத்தர்கள் முருகானந்தம், முருகேசன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் பிரபாகர் உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பாக விருதுநகரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் நால்வர் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் செல்லப்பாண்டி, சங்கரபாண்டி, சரவணக்குமார், சுப்பிரமணியன், சிவனேசன், கணேசன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.