Published : 17 Feb 2022 08:43 AM
Last Updated : 17 Feb 2022 08:43 AM

பழனிசாமி ஆதரவாளர் வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை: ரூ.50 ஆயிரம் பறிமுதல்

சேலம்: முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவனுக்கு சொந்தமான ஆத்தூர் அருகேயுள்ள பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய சோதனையில் ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், ஜெயலலிதா பேரவை சேலம் மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மற்றும்பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுஇருப்பதாக தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, துணை வட்டாட்சியர் முருகையன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ஆத்தூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளங்கோவன் இல்லை.

வீட்டின் வெளியில் சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ் தலைமையில் டிஎஸ்பிக்கள் முத்துசாமி (வாழப்பாடி), ராமச்சந்திரன் ( ஆத்தூர்) உள்ளிட்ட 50 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனை நடப்பது குறித்து தகவல் அறிந்து இளங்கோவன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சித்ரா, ஜெயசங்கரன் உள்ளிட்ட அதிமுகவினர் பண்ணை வீட்டுக்கு வந்து சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

“தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக” கூறிய பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ரூ.50,000 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் பறக்கும் படையினர் அறிவுறுத்திச் சென்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சேலம் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகியின் வீட்டில் நடந்துள்ள சோதனை அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x