

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் கடந்த 11.12.2020 அன்று திறந்தவெளியில் மலம் கழித்தனர். இதைக்கண்ட மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அபினேஷ்(22), நாராயணசாமி மகன் சிலம்பரசன்(27), செல்லமுத்து மகன் செல்வக்குமார்(25) ஆகியோர், 5 சிறுவர்களையும் அடித்து உதைத்து, அவர்களையே மனித கழிவை அள்ளச் செய்து, துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட அபினேஷ், சிலம்பரசன், செல்வக்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை என்பதால், அபினேஷ் உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தனர்.