

திருவண்ணாமலை: செய்யாறு அருகே 4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த தாயின் ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தில் வசித்தவர் நர்மதா. அவர், தனது கணவர் மறைவுக்கு பிறகு ஆண் நண்பர் வினோத்குமாருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுடன் நர்மதாவுக்கு பிறந்த நித்தீஷ்(6), சித்தார்த்(4) ஆகியோரும் வசித்து வந்தனர். செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் நர்மதா பணியாற்றி வருகிறார். இதனால், நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர், மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மகன் சித்தார்த்(4) ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து நர்மதா கொடுத்த புகாரின் பேரில் தூசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் நர்மதாவின் ஆண் நண்பர் வினோத்குமார், சித்தார்த்தின் இரண்டு கால்களையும் பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை (30) காவல் துறையினர் கைது செய்தனர்.